Thursday, May 31, 2018

இது மே பீலிங்ஸ்

மே மாதத்தில் பிறந்திருக்கும் ஒவ்வொரு குழந்தைக்குமான உணர்வு. ஸ்கூல் லீவு.ஒரே சந்தோசம்தான்.ஆனால் சிறு வயதில் பிறந்த நாட்கள் என்றால் ஒரு தனி குஷிதான்.யாருக்குத்தான் கிடையாது.அதுவும் எல்லாரும் யூனிபார்ம் அணிந்திருக்கும் போது அவர்கள் மட்டும் கலர் ட்ரெஸ்ஸில் இருப்பது, அதை அனைவரும் பார்க்கும்போது வருமே ஒரு சந்தோசம், அனுபவித்தால் மட்டுமே புரியும்.  புது டிரஸ்,சாக்லேட்,மனத்துக்குப் பிடித்தமானவர்கள் கொடுக்கும் கிப்ட் என குதூகலமான உணர்வு ஒரு வாரத்துக்கு முன்பு இருந்தே ஆரம்பித்து விடும்.இது மற்ற மாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு.ஆனால் மே மாதத்தில் பிறந்தவர்களுக்கு கொஞ்சம் கடினம்தான். லீவு நாட்கள் என்பதால் குடும்பத்தோடும், பக்கத்தில் உள்ள அக்கம்பக்கத்தினாரோடுமே  அந்நாள் முடிந்து விடும்.

எனக்கு பிறந்த நாள் கொண்டாடுவதில் விருப்பம் அவ்வளவாக இருந்தது இல்லைதான். அதுவும் ஒரு மெச்சுருட்டி வந்தவுடன் அதுவும் இல்லை. தினமும் யாராவது எப்பொழுதாவது இரவு 12 ரெண்டு மணி வரை என்னோடு சாட் செய்து கொண்டிருந்தால் அவர்களுக்கு பிறந்த நாள் மெசேஜ் அனுப்புவது வழக்கம்.உடனே குழப்பமாகி எனக்குப் பிறந்த நாள் இன்று இல்லையே, உங்களுக்கா என்று கேட்பார்கள்.நான் உடனே இல்லை எப்பொழுதும் இந்த நேரம் ஆகி விட்டால் இப்படி ஹாப்பி பர்த்டே மெசேஜ் அனுப்புவது எனது வழக்கம் என்று கூறுவேன்.  அதில் இருந்து அடுத்த முறை எப்பொழுது எல்லாம் அவர்கள் சாட் செய்கிறார்களோ இரவு ஆகி விட்டால் அவர்களும் எனக்கு ஹாப்பி பர்த்டே என்று வாழ்த்து அனுப்பவது வழக்கம் ஆகி விட்டது. இது என்னோடு நெருக்கமாக பழகிய அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அப்படித்தான் எனக்கு ஒவ்வொரு நாளும் பிறந்த நாள் தான்.நான் என்று சந்தோசமா இருக்கிறேனா அன்றுதான் தீபாவளி பொங்கல் எல்லாம்.    




எனது வீட்டில் எப்பொழுதும் பிறந்த தேதியை விட நட்சத்திரபடி கொண்டாடுவதே வழக்கம். சென்னையில் இருக்கும் போது இரண்டு முறை கொண்டாடுவது வழக்கமானது. தங்கை எனக்காய் நண்பர்களோடு சேர்ந்து கொண்டாடுவதிலேயே எனது பிறந்த நாட்கள் கழிந்து விடுகின்றன.

ஆனால் இப்பொழுதும் ஒரே ஒரு பிறந்த நாள் மட்டும் எனக்கு இனிமையான நினைவுகளைத் தந்து கொண்டே இருக்கின்றது. நான் அப்பொழுது 6 வகுப்பு படித்துக் கொண்டு இருந்த நேரம். இம்முறை நட்சத்திரம் (மிருகசீரிஷம்) ஜூன் மாதத்தில் வந்ததால் பள்ளிக்கூடம் இருந்த நேரமாகப் போய்விட சந்தோசமா கொண்டாடத் தயாரானேன். ரோஸ் கலர் சுடிதார். இப்பொழுதும் கண்முன்னால் தெரிகிறது.

அருண் அண்ணா.என்னுடைய வீட்டின் எதிர் மாடியில் இருக்கும் அண்ணா. மிகவும் ஒல்லியாய் உயரமாய் முகத்தில் பருக்கள் இருந்தாலும் எனக்கு மிகவும் அழகாய்த்  தெரியும் அண்ணா  எனக்கு மிகவும் பிடித்த அண்ணா. எல்லாருக்கும் சிறு வயதில் மனத்துக்குப் பிடித்த அக்கா அல்லது அண்ணா இருப்பார்கள்.அதிலும் மிகவும் கிரேஸி எனச்  சொல்லலாம். அந்த மாதிரிதான் அண்ணாவும் எனக்கு. அண்ணா பார்ப்பதற்காக சத்தமாக பேசுவது, டான்ஸ் ஆடுவது, அவரின் முன்னால் அடிக்கடி கிராஸ் செய்வது என நிறைய சுட்டித்தனமான விஷயங்கள் செய்து இருக்கிறேன். 

அன்றும் காலையில் அண்ணாவிடம் கொடுப்பதற்காக  ஆர்வத்துடனும் மகிழ்ச்சியோடும் வீட்டிற்கு சென்றேன். ஆன்ட்டி என்னிடம்  வாழ்த்துக்கள் சொல்ல, உள்ளே எட்டிப்பார்த்துக் கொண்டே அண்ணா இல்லையா எனக் கேட்க, அவர் சிரித்துக் கொண்டே அவன் அப்பவே காலேஜ் போய்ட்டான் மா என்று சொல்ல, எனக்கு பெருத்த ஏமாற்றம். சரி ஈவினிங் வருகிறேன் என்று சொல்லி விட்டு ஸ்கூல் வந்தாகி விட்டது. 

கலர் டிரஸ்ஐ பார்த்தவுடனே பார்க்கின்ற அனைவரும் வியப்புடனும் ஆசிரியத்துடனும்,ஹே பர்த்டேவா, என்று சில பல வாழ்த்துக்களை வாசலில் வைத்தே வாங்கியாகிவிடுவோம்.  கிளாஸ் மிஸ் வந்தவுடன் அனைவரின் முன்னே வந்து நிற்க சொல்லி, அனைவரும் ஹாப்பி பர்த்டே சாங் பாட, சிரித்துக் கொண்டே, சாக்லேட்ஐ  பெஞ்ச் பெஞ்ச்சாக  அனைவருக்கும் கொடுத்துவிட்டு நமது இருக்கையில் அமரும்போது வருமே ஒரு பெருமூச்சு. அது ஒரு மனநிறைவான உணர்வு. 

மதியம் வீடு பக்கம் என்பதால் வீட்டிற்கு சென்றே சாப்பிடுவது வழக்கம். அன்றும் சென்று இருந்தேன். முடித்து விட்டு வாசலில் வரும் போது தேவி என்று கூப்பிடும் சத்தம். எட்டி மாடியில் பார்த்தால் அருண் அண்ணா கையை ஆட்டி மேலே வா என்று கூப்பிட,பார்த்த எனக்கு உச்சக்கட்ட சந்தோசம்.விருட்டென்று மாடிப்படியில் ஒரு படி விட்டு ஒரு படி தாவி வீட்டு பக்கம் வந்ததும் உடனே மெதுவா எட்டிப் பார்க்க அண்ணா உள்ளே வாடா என்று கூப்பிட, சிறிது மகிழ்ச்சி கலந்த உணர்வோடும், பதைப்போடும் உள்ளே செல்ல, ஹாப்பி பர்த்டே டா என்று ஒரு கிப்ட் கொடுத்தார். உலகத்தில் உள்ள அத்தனை சந்தோஷங்களும் என் கைக்குள் வந்து விட்ட மாதிரியான உணர்வு. ரொம்ப தேங்க்ஸ் அண்ணா என்று அண்ணாவிற்கு இனிப்பு கொடுத்துவிட்டு,நேரமாகி விட்டது வருகிறேன் என கூறி விட்டு வெளியே வந்தேன். 

உச்சி வெயில்.அது கூடத் தெரியவில்லை எனக்கு.மனதில் சந்தோசமாக அந்த கிப்ட்ஐ ஏதோ ஆஸ்கர் அவார்டேயே கொடுத்தது போல் மகிழ்ச்சியுடன் வைத்துக்கொண்டு இருந்தேன். மதியம் எனது இடத்தில அமர்ந்து, உள்ளே என்னவென்று தெரிந்தாலும் எப்படி இருக்கும் என கிப்ட் பேப்பர்ஐ கிழித்துப் பார்க்க உள்ளே ஒரு அழகான வயலட் நிறத்தில் ஒரு பென்சில் பாக்ஸ். அதை டெஸ்க்கின் மேல் வைத்து உபயோகப் படுத்திக்க கொண்டு இருக்கும் பொழுது, மிஸ் பக்கத்தில் வந்து அதை பார்த்து விட்டு, அழகாக இருக்கிறதே என்று கூற ,நான் உடனே மிஸ், அது என் அண்ணா எனக்காய் பரிசு கொடுத்தது என்று பெருமையுடன் கூறியது இன்றும் கண்முன்னே இருக்கின்றது. 

இப்பொழுதும் எத்தனையோ மகிழ்ச்சியான பிறந்த நாட்கள் இருந்தாலும், எனது வாழ்க்கையில் அருண் அண்ணாவுடன் கொண்டாடிய அந்த நாட்களைப் போல் இல்லைதான்.     

எத்தனை மே மாத குழந்தைகளுக்கு இப்படி ஒரு உணர்வு இருக்கும் எனத் தெரியவில்லை. அவர்கள் அனைவருக்குமாய் இது ஒரு சமர்ப்பனம்.

5 comments:

Unknown said...

Enakum same feeling... En birthday ku one day munnadi school leave vitruvanga.. nanum school la celebrate pannadhe illa ����

Unknown said...

Enakum same feeling... En birthday ku one day munnadi school leave vitruvanga.. nanum school la celebrate pannadhe illa 😂😂

Unknown said...

Lovely 👌👌

Unknown said...

Sis story superb sis and may month childrens story nice and arun anna birthday 🎉 story superb😍😊🤓😇😉

நெல்லை கார்த்திகேயன் said...

அருமையான​ பதிவு....