Saturday, December 29, 2018

10.09.18. சென்னை.

லாஸ்ட் பஸ் என்பதால் மெதுவாக கிளம்பி, நிதானமாக கோயம்பேட்டில் என்னை இறக்கி விட்டு தம்பி கிளம்ப, உள்ளே வந்து லக்கேஜை  எண்ணி சரி பார்த்து விட்டு கம்பிக்கு வெளியவே நின்று கொண்டு இருந்தேன். உள்ளே அனைவரும் பேருந்துக்காய் காத்துக் கொண்டிருக்க ,சிலர் பக்கத்து இருக்கையில் பையை வைத்திருந்தனர். நான் நின்று கொண்டிருந்த இடத்திற்கு பக்கத்தில் ஒரு அம்மா லக்கேஜோடு சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே நின்று கொண்டு இருந்தார். அவர் கால் வலி முகத்தில் தெரிந்தது.  
பஸ் வரும் நேரம் தெரிந்தும், மீண்டும் ரிஸ்ப்ஷன் சென்று நேரத்தை உறுதி செய்து கொண்டு திரும்ப நான் நின்று கொண்டு இருந்த இடத்திற்கு வந்தேன். மீண்டும் உள்ளே பார்த்தேன்.அதே சீன். உள்ளே போகப் பிடிக்காமல் அந்த கம்பியின் நடுவே சிறிய கேப்பில் உட்கார்ந்து கொண்டு அனைவருக்கும் அப்டேட் செய்யலானேன். 
முடித்து விட்டு திரும்ப பார்த்த பொழுது, அந்த அம்மா என்னைப் போல் உட்கார்ந்து கொண்டார். நான் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே, உள்ளே போய் நல்லா உட்காரலாமே அம்மா எனக் கூற, அவர் அதற்கு,"பரவா இல்லமா.இங்கயே நல்லா இருக்கு என்று உள்ளே பார்த்துக் கொண்டே கூறினார். சில சீட்டில் பையை வைத்து இருந்தனர். நான் "போய் கேட்டு உட்காருங்கமா.இவங்க எல்லாம் இப்படித்தான்.கேட்கிற வரைக்கும் நகர மாட்டாங்க." எனக் கூற  அவர் எங்கம்மா கேட்டா பீஸ் ஆப் மைண்ட் தான் போகும் என்றார். இப்படியே கேட்காம போய் போய்தான் இவங்க எல்லாம் இப்படி இருக்காங்கம்மா என்றேன். அவரும் அதற்கு தலையாட்டினார். நானா இருந்த கேட்டு உட்கார்ந்து இருப்பேன். ஆனா மூட் இல்ல, இங்கதான் இருக்கனும் போல இருத்துச்சு அதான் என, இப்படியாக ஆரம்பித்தது எங்களின் உரையாடல்கள். 
உங்க பேரு என்ன அம்மா?
"ராணி"
என் பேரு தேவிமா, என அறிமுகப் படித்துக் கொண்டேன்.
எங்கம்மா ஊருக்கு போறியா? என ஆரம்பித்து, ஆம் அம்மா, இங்குதான் பல வருடங்கள் வேலை பார்த்தேன். இப்பொழுது கொஞ்சம் பாக்கி வேலையை முடித்து விட்டு ஊருக்கு போகிறேன் என ஆரம்பித்து என்னை பற்றிய விவரங்களை கூற ஆரம்பித்தேன். அழகாக கேட்டு விட்டு, அவரும் அவர்களின் குடும்பத்தைப் பற்றிக் கூறலானார். கூறும்போதே பார்க்க வேண்டும் போல் இருக்க, கேட்டவுடன் அவர்களின் போட்டோவை காட்டினார். மிகவும் அழகாய் பெண்ணுக்கு பேரனும், மகனுக்கு பேத்தியும் என பார்க்கும் போதே மிக்க மகிழ்ச்சியாய்  இருந்தது. அந்த சந்தோசத்தை அவரிடம் வெளிப்படுத்தினேன். 
என்னுடைய திருமணப் பேச்சு வந்த போது அவர் கவலைப்படதடா, இவ்வளவு நாள் பொறுமைக்கு நல்லதா வந்து அமையும் பாரு என்று கூறிய போது சிலாகித்து தான் போனேன். என் மகளுக்கும் ஜாதகம் பார்த்து இரண்டு வருட  திருமணம் தாமதமாகத்தான் திருமணம் செய்து வைத்தேன். எல்லாரும் சொல்லுவார்கள் என்ன வெயிட் பண்றே? யாரையாவது லவ் மரேஜ் பண்ணிக்க வேண்டியதுதானே என்று கூட சொல்லுவாங்க. யார் பேச்சையும் கேட்காத. உனக்கு கடவுள் அருளால் சீக்கிரம் நல்ல வரன் அமையும் பாரு எனவும், புன்னகையோடு அவர் உரிமையாக பேசிக் கொண்டு இருந்ததை ரசித்துக் கொண்டு இருந்தேன்.அத்தோடு நில்லாமல் அவரின் கணவரையும் அழைத்து, ஏங்க இந்த பொண்ணு இங்கதான் வேலை பார்த்தளாம். இப்ப ஊருக்கு போற. அவளுக்கு நல்ல வரன் அமையட்டும்னு பிளஸ் பண்ணுங்க, என்ற போது ஆச்சிரியத்தின் உச்சரித்திக்கே சென்றேன். உடனே எழுந்து நின்று வணக்கம் அப்பா, நல்ல இருக்கீங்களா என்று கூறி அவர் ஆசிர்வத்தை பெற்றுக் கொண்டேன்.
அம்மா உங்களோடு ஒரு போட்டோ எடுத்துகிறேன் என்று கூறி புகைப்படம் எடுத்தாகி விட்டது. அம்மாவும் அதே போல் எடுத்துக் கொண்டு, எங்கள் ஊருக்கு வாருங்கள் அம்மா என்று, காண்டாக்ட்யையும் வாங்கிக் கொண்டேன். எல்லாம் முடிக்கவும் அவர்களின் பஸ் வர, அன்பாக விடை பெற்றுக் கிளம்பினார்கள்.
ராணிமா உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. சிறுது நேரம் என்றாலும், என் மனதிற்கு ஆறுதலான அன்பான நேரங்கள் உங்களுடனான உரையாடல்கள். அவ்வளவு ஒரு மன நிம்மதியான நிமிடங்கள்.
எனக்காய் கிடைத்த இன்னொரு அழகான அம்மா ராணிமா.
x