Tuesday, September 18, 2018

என்னைக் கடந்த மனிதர்கள்


வாழ்கை எவ்வளவு அற்புதமானது.சிறிய காலத்தில் எத்தனை எத்தனை மனிதர்களை கடந்து வந்து இருப்போம். எனக்கு பொதுவாகவே புதிய மனிதர்களை பார்த்தவுடன் பழகி விடுவது மிக எளிதான ஒன்று, இது வரைக்குமே எத்தனை அற்புதமான நினைவுகள். அனால் அம்மா அப்பா தங்கை எப்பொழுதுமே திட்டுவதுண்டு.ஏன் அனாவசியமா புது மனுசங்ககிட்ட பேசிகிட்டு. ஏதாவது பிரச்சனை ஆகிடப் போகுது, பேசாதே என்று கூறும் போது என்னையே நிறைய முறை கேட்டு இருக்கிறேன், இந்த சிறுது நேர உரையாடலில் அப்படி என்ன அபாயம் நிகழ்ந்து விடப் போகிறது என்று.

நிறைய முறை கேட்டும் என்னால் மட்டும் மாற்றிக் கொள்ள இயலவில்லை. இது வரையிலும் எனக்கு நல்ல அனுபவங்களை மட்டுமே தந்து இருக்கிறார்கள். எவ்வளவு கெட்ட மனிதர்கள் நேரங்கள் இருந்தாலும், ஏதோ ஒரு நம்பிக்கை எனக்கு. நல்லது தான் நடக்கும் என்று.  அதை நிரூபிக்கும் வரையில் இப்பொழுது வரை அப்பிடித்தான் நடந்து இருக்கிறது.

எத்தனை மனிதர்கள்,எத்தனை கதைகளைக் கடந்து வந்து இருக்கிறேன். இனி அடிக்கடி பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்.வாழ்கை என்பது நாம் சந்திக்கும் மனிதர்களில் தானே இருக்கிறது. ஒரு கட்ட காலத்தில் திரும்பி பார்க்கும் பொழுது சில உரையாடல்கள் சந்தோஷத்தையும், வியப்பையும்,ஆச்சிரியத்தையும் சில நேரங்களில் ஒரு விதமான மன நிறைவையும் எளிதாக தந்து விடுகிறது.

பயணம் எனக்குப் மிகவும் பிடித்தமான ஒன்று. புதிய இடம், உணவு முறை,கலாச்சாரம்,மனிதர்கள், என நினைக்கும்பொழுதே புத்துணர்ச்சி தருகின்ற ஒன்று. எப்பொழுது பயணம் செய்தாலும் ஒவ்வொரு மனிதர்களையும் கவனத்துக் கொண்டே இருப்பேன். ஒவ்வொருவரையும் பார்க்கும் பொழுது, இவர்களுக்கு என்ன மாதிரியான கனவுகள் இருக்கும், என்ன என்ன பிரச்சனைகள் இருக்கும், இப்பொழுது எங்கே சென்று கொண்டு இருப்பார்கள், அவர்களின் செய்கைகள் நடை உடை பாவனைகள் என்று அனைத்தையும் கவனித்து  க் கொண்டு இருப்பேன். அது பேருந்து அல்லது ரயில் பயணமாக இருக்கட்டும்.

அப்படிப்பட்ட பயணத்தில் சந்தித்த என்னைக் கடந்த மனிதர்களைப் பற்றிய பதிவுகள்தான் இது.  

No comments: